Sunday, November 20, 2011

ஊர்க்குருவி




ஊர்க்குடிசை தோறும்
ஊர்க்குருவி கூடுகட்டி வாழும்
உலகத்தவர்க்கெல்லாம் - அது
உயர்ந்ததென்று தோன்றும்.

எமக்கும் குடிசை வீடு
அதற்குள்
அதற்கும் ஒரு கூடு
நோக்கும்போது எல்லாம்
பார்க்கும் கண்களை உருட்டி.

சோம்பலின்றி வாழும்
சோகம் இன்றிப் பாடும்
சொந்த முயற்சியில் கூட்டை
சேர்ந்து கட்டியெடுக்கும்

கூடி என்றும் திரியும்
குடும்பமாக வாழும் - சிலர்
கூடு கலைத்து விட்டால்
குடும்பத்தோடு குழறும்.

எனினும்
வாழவென்றே நினைக்கும்
வானமெங்கும் பறக்கும்
தேடி ஒரு கூட்டை
மீண்டும் கட்டி எடுக்கும்.

வண்ணமுட்டை இட்டு
வடிவாய் அடை காக்கும்
உடைந்து ஒன்று போயினும்
உயிர் வலிக்கத் துடிக்கும்

கொஞ்சிக் குலாவி வாழும்
குஞ்சும் பொரித்து மகிழும்
ஓன்று மாறி ஒன்று அதற்கு
கொண்டு கொடுக்கும் உணவு.

முயற்சியோடு வாழ்வதால்
பசித்து அவை கிடப்பதில்லை
பாம்பு பருந்து என்றால்
பயந்து நடுங்கி பறந்துவிடும்.

பட்டுப்போர்த்த மேனி அதைத்
தொட்டுப் பார்க்கச் சொல்லும்
எட்டுப் போட்டு நடந்தால்
அழகை மனதில்
விட்டுப் போட்டுப் பறக்கும்.

கள்ளம் இன்றி வாழ்வதால்
தொல்லை நேர்ந்ததில்லை
அதன்
உள்ளம் பார்க்கவிரும்பினால்
ஊரில் வந்து பார்க்கலாம்.
-.மேரா-

No comments:

Post a Comment