Sunday, November 20, 2011

கிராமத்துப் பெண்




பொன்னாச்சி ஐயாவின்
பொண்டாட்டி குஞ்சம்மா
நெஞ்சில் வஞ்சமில்லாத தங்கம்மா

குழிவிழுந்த முகமும்
வெத்திலாக்குக்
கறைபடிந்த வாயும்
கோதிக் கட்டிய
நரை விழுந்த கொண்டையும்
செருப்பைப் பிடிக்காத
தேய்ந்து போன காலும்
பட்டென்ற பேச்சும்
படபடத்த நடையுமாய்
உலாவிய உருவம்

குளத்தில் குஞ்சு மீன் பிடிக்க
அத்தாங்கும் ஒமலுமாய்
குறுக்கக் கட்டோடு
புறப்படும் அணிக்கு
அவள்தான் தலைவி

புள்ள பொறந்தா
புள்ள பெரிசாகி
தண்ணி வாத்தா
யாரும் செத்தா
ஊருல உத்தியாக்களுக்குச் செய்தா
முந்திப் போய் பந்தியில
குந்தியிருந்து
எழும்பி வராட்டி
நிம்மதியில்ல அவளுக்கு.

வண்டில் மாட்டை
பேய் மறித்த கதை
குஞ்சம்மா
வரம்புக் கட்டில
குந்தியிருந்து காட்டுக்குப் போனபோது
கோயிலுக்குப் போக
கூட்டமாய் வந்த சனம்
பேயெண்டு
கீரிட்டு ஓடின கதையெல்லாம்
கூடிப் பழகினா
சிரிப்போட சொல்லிடுவா.

கட்டிய கணவனை
கண்ட பிள்ளைகளை
இயற்கையோ
கொடுத்துப் பறித்திட
நெஞ்சில் கவலையோடு
தனிமையில் இருந்தாலும் குஞ்சம்மா
மானத்தோடு வாழ்ந்து
கிராமத்துப் பெண்ணாய்
மண்ணோடு கலந்து விட்டாள்.

-.மேரா-

No comments:

Post a Comment