Wednesday, November 23, 2011

கொக்கட்டிச்சோலைத் திருத்தான்தோன்றீச்சர பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம்,க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்காக நடாத்தும் பரீட்சைக்கு உதவு கருத்தரங்கு – 2011

கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, இரண்டு மணித்தியாலம்
தமிழ் மொழியும் இலக்கியமும்-111
முக்கியம்: அறிவுறுத்தல்களுக்கேற்ப ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
• 1.2.3.4 ஆகிய வினாக்களுக்கும் 5.6.7 ஆம் வினாக்களில் ஏதாவது ஒரு வினாவிற்கும் விடை எழுதுக.
• இவ்வினாத்தாளுக்குரிய புள்ளிகள் 80 ஆகும்.

1. சுருக்கமான விடை தருக.
(i) “சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது.”
(அ) இகல் என்பதன் கருத்து யாது?
(ஆ) இக்குறட்பாவின் கருத்தை எழுதுக.
(ii) கலம்பகம் என்பது ஒரு சிற்றிலக்கியத்தின் பெயர்.நந்திக்கலம்பகம் எனப்பெயர் வரக் காரணம் யாது?
(iii) “என்மேல் குற்றம் குறை இருந்தால் அதனை விசாரிக்கவும் என்னைத் தண்டிக்கவும் விதிமுறைகள் உண்டு” - இக்கூற்று யாரால் கூறப்பட்டது?
(iv) “நல்லமரமும் நச்சுமரமும்” என்னும் கட்டுரையின் ஆசிரியர் யார்? இக் கட்டுரை எந்நூலில் உள்ளது?
(v) “செங்கண் மாக்கோதை சினவெங்களியானை”- இதில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
(vi) “நண்பகலின் வெய்யில் அஞ்சி மரத்தடியில் ஒதுங்கும் பெரு நிழல்” - இதில் இடம்பெறும் அணியினை விளக்குக.
(vii) “சென்றொழிந்த காலம் திரும்பி வரமாட்டாது குன்றிற் பொழிந்த மழையின் பெருவெள்ளம் ஓடைகளாய் மாறி…….”
(அ) இக் கவிதையின் தலைப்பு யாது?
(ஆ) இக் கவிதை எத் தொகுப்பு நூலில் அமைந்துள்ளது?
(viii) “பாதகா என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்றுவிட்டாயே, என்னை மணக்கலாம் என்றல்லவோ இருந்தாய்!”
(அ) இக்கூற்று யாருக்குக் கூறப்பட்டது?
(ஆ) சிங்கம் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(ix) “மங்கயர்க்கரசியின் காதல்” என்னும் சிறுகதைக்கு சூசிகை எழுதப்பட்டதன் நோக்கம் யாது?
(x) பின்வரும் குறளைச் சந்தி பிரித்து எழுதுக.
“நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு”
2. பின்வரும் செய்யுட் பகுதிகள், உரைப்பகுதிகள் ஒவ்வொன்றினதும் கருத்தை உமது மொழிநடையில் எழுதுக. அவை ஒவ்வொன்றிலும் தடித்த எழுத்துக்களில் உள்ள தொடர்களின் சிறப்புக்களை விளக்கி எழுதுக.
(அ) “மண்ணெல்லாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நல்நாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே”.
(ஆ) மஞ்சுமஞ் சுங்கைப் பரராஜ சேகர மன்னன் வெற்பில்
பஞ்சுமஞ் சும்பதப் பாவைநல் லாய்படை வேள் பகழி
அஞ்சுமஞ் சுங்கய லஞ்சுமஞ் சுங்கட லஞ்சுமஞ்சும்
நஞ்சுமஞ் சும்வெற்றி வேலோ வுனது நயனங்களே.
(இ) அப்பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் இருகே அழைப்பன போல் அசைந்தன. அவ்வாவியின் தண்மையும் செம்மையும் கண்ட இருவரும் தாய் முகம் கண்ட சேய்போல மனம் களித்து அந்நன்னீரைப் பருகி மகிழ்ந்தார்கள். அருந்தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மைபோல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன.
(ஈ) மாசியில் மறைந்த மதியின் துலக்கமும், கூடை கவிழ்ந்த விளக்கின் ஒளியும் போல் நம்மை மூடிக்கொண்டிருக்கும் அறியாமை என்னும் இருளில் அகப்பட்டவர்களாகி நம் அறிவையிழந்து அழியாச் செல்வத்தை அடைய முயலாமல், நிலையின்றி அழிந்துபோகும் பொருள்களையே நிலையாகப் பிழைபட நினைத்து அவற்றைப் பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றொம்.
3. தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெரியார் பால் அமைந்த செல்வமும் பிறருக்கு எதுவுமே கொடுத்துதவாத பேதையர் பால் அமைந்த செல்வமும் நல்லமரமும் நச்சு மரமும் என்னும் கட்டுரையில் விளக்கப்பட்டிருக்கு மாற்றினை தெளிவுபடுத்துக.
அல்லது
விடியுமா சிறுகதையின் தொடக்கம்,முடிவு, கதைக்கும் தலைப்புக்கும் இடையிலான பொருத்தப்பாடு ஆகியவை குறித்து எழுதுக.
4. நளவெண்பா சுயம்வர காண்டப் பகுதியில் தமயந்தியின் அழகு, மனநிலை, விவேகம் என்பன சித்திரிக்கப்பட்டிருக்குமாற்றை விளக்குக.
அல்லது
நந்திக் கலம்பகம் என்ற இலக்கியத்தில் இடம்பெறும் (அ) மண்ணெலாம் உய்ய…..(ஆ) மங்கையர்கண் புனல்பொழிய ……எனத்தொடங்கும் பாடல்களில் தலைவனைப்பிரிந்த தலைவியின் பிரிவுத்துயரும் நந்திவர்மனின் கொடைச்சிறப்பும் வெளிப்படுத்தப்படுமாற்றை எழுதுக.

• 5,6,7 ஆம் வினாக்களுள் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்து எழுதுக.
5. மங்கையர்க்கரசியின் காதல் என்ற சிறுகதையில் மங்கையர்க்கரசி கருணாகரன் மீது கொண்ட அளவற்ற காதல் புலப்படுத்தப்பட்டிருக்கும் வகையினை மூன்று சம்பவங்களைக்குறிப்பிட்டு, விளக்குக.
6. நிழலின் நினைவு என்ற கவிதையை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
(அ) இக்கவிதையைப் பாடிய கவிஞரின் பெயர் யாது?
(ஆ) இக்கவிதையில் கவிஞர் புலப்படுத்தும் பிரதான கருத்து யாது?
(இ) இக்கவிதையில் இடம்பெறும் அணிகளை எடுத்துக் காட்டுக்களுடன் குறிப்பிடுக.
7. (அ) வாழ்த்துக்கவி, வசைக்கவி என்பவற்றை விளக்குக.
(ஆ) சடையப்பவள்ளலைக் கம்பர் ஏன், அவ்வாறு வாழ்த்திப் பாடுகின்றார்?
(இ) இடைச்சியர் கொடுத்த மோரைக் குறித்துக் காளமேகப்புலவர் ஏன், எவ்வாறு வசை பாடுகின்றார்?

No comments:

Post a Comment