Saturday, December 10, 2011

ஒரு பணப்பேயும் நாலைந்து அடியாட்களும்.

கண்ணீரோடு ஊர்வாய்கள் கதை சொல்லித்திட்டியும்
ஒரு பணப்பேயும் நாலைந்து அடியாட்களும்
ஓயவில்லை என்றனர் பலர்.
பிறந்தோர் யாவரும்
இறப்பர் என்பதால் ஊரார் மொழி
காதில் இனித்தது.

என்னாசை மண்ணாசை என்று தெரிந்தும்
பொன்னாசை என்னை விடவில்லை.
என்காலில் விழுந்து என்சொல் கேட்டுத் தோள்கொடுக்க
துணையாய் நின்றனர் சிலர்

நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தலென்று
பாரதி புகன்ற மொழியும்
ஊரார் அழுத கண்ணீர் உருத்துமென்னும் சொல்லும்
என்மூளைப்பள்ள இடுக்கில்
மரணித்துப் போயின.

இரவு தூங்கினும்
மூளை தூங்க
ஆசை விடவில்லை.
யுத்தம் வெள்ளம் புயலென
நித்தம் கொடுமைகள் வந்தன மக்களுக்கு.

துன்பக் கனலில் விழுந்து உழலும்
மக்கள் பெயரில்
இன்பம் காண மனம் பின்னிக்கவில்லை.

போலிக் கையொப்பங்கள் பொலிவாய்க் கிடைத்தன.
பொலி பொலி தம்பிரான் பொலியென பொலிந்தது பணம்.
நிறைந்தது பண மூட்டை.
கேலி செய்து புட்டிசம் அடித்தனர் பலர்.
எனினும்
யாமிருக்கப் பயமேன் என்று
வேலியாய் மேல் அதிகார அருள்
காத்தது என்னை.

என் செயல் அநீதியென
வாயில் பலர் முணுமுணுத்தாலும்
காட்டிக்கொடுக்கவும்
முன் வந்து நிருபிக்கவும்
முயலவில்லை யாரும்.

இரகசியங்கள் அந்தரங்கமாயத் தூங்கின.
வீட்டுத் திட்டங்கள் வீதி அபிவிருத்தியென தொடர்ந்து வந்தன
அபிவிருத்தித் திட்டங்கள்
என்னாட்சி நிலைக்க அதிகார அருள் பரிசளித்தது.

கடவுள் பற்றிய சந்தேகங்கள்

ஆழி நீரிலும் குருதி கொப்பளிக்க
ஊழித்தாண்டவம் ஈழத்தை மேய்ந்தது.
கல் வைத்த பதியெங்கும்
கண் மூடி மன்றாடி
கூப்பிட்டுக் கட்டியழுதபோதும்
பலிகொண்ட துப்பாக்கி
தின்னத் துரத்த
ஊழன்று அலைந்து
கருகி எரிந்து
மக்கி மண்ணாகியபோதும்
காலம்தோறும்
அசுரரை அழிக்க
கதைகளில் வந்த
கடவுளர் ஒருவர் கூட பிறந்து வரவில்லை.

சூலமும் வேலும் ஏந்தி
வீரமும் தீரமும் காட்டி
வீற்றிருந்த கடவுளர் எவரும்
குண்டுகள் விழுந்து
கூரைகள் சிதைந்து
கோயில்கள் எரிந்தபோதும்
தம் அங்கங்கள் உடைந்து
அலங்கோலமாய்ப் போனபோதும்
தன் மானங் காக்கத் துணியவுமில்லை.

யுத்த அரக்கனை
எதிர்க்கப் பலமின்றி
ஓடி மறைந்த கடவுளருக்கு
சொந்தப்பதியில்
மீளக்குடியமர
துளியும் ஏனோ
இன்னும் துணிவு வரவில்லை.

அநீதியை அழிக்கும்
கடவுளரைத் தோற்றுவிக்கும்
என் கனவுகளில்
கருக்கொள்ளும் கடவுளர்களை
யாரோ கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.