Sunday, November 20, 2011

மனமாற்றம்



படகை நிறுத்தி விட்டு பக்கத்தில் இருக்கும் பற்றைக்குள் போன பாதையோட்டிகள் எப்போது வருவார்கள் என்று பார்த்துப்பார்த்தே பாதையில் நின்றவர்களின் கண்கள் அலுத்துவிட்டன. மண்முனை படகுப்பாதையில் ஏறிநின்ற மாரிமுத்துவின் மனசு முழுதும் சந்தோ~ப்புயல். “அடியே மச்சாள் நாளைக்கு புள்ளைக்கு கல்யாணம்டி. காட்டு ஒன்டும் அடிக்கல்ல தெரிஞ்சாக்கள் கொஞ்சப்பேருக்கு வாயால சொல்றன். கட்டாயம் வந்திரனும்”. என்றாள் பக்கத்தில் நின்ற வள்ளியிடம். இருவரும் நீண்ட காலத்து நண்பர்கள். மீன்பிடிக்க, கொள்ளியெடுக்க, உப்பட்டி கட்ட என்று எல்லா இடங்களுக்கும் இருவரும் செல்வதுண்டு. அந்த நெருக்கத்தில் பாதையில் நின்றவர்களையும் பாராமல் வள்ளியுடன் சத்தமாக கதைத்துக்கொண்டிருந்தாள்.
“யாரு மாப்பிளை” என்றாள் வள்ளி. “மாப்பிள தங்கமானவரு. பேரு வேலன். இங்கதான் பக்கத்தில ப+ஞ்சாமடுவில இருக்காரு. புள்ள வகுப்புக்கு போகக்குள்ள லவ் பண்ணித்து மனசப் பிரிக்க மனம் இல்ல விட்டுத்தன். என்ன செய்ற எல்லாம் விதிப்படியே” மாரியின் பதில் தொடர்ந்தது. “ரெண்டெடத்த சாத்திரம் கேட்டாச்சு. யோடிப்பொருத்தம் பிரமாதமாம். இதவிட்டா முப்பத்தெட்டு வயதாகுமாம். நீயென்னடி செல்றா? “இந்தக் காலத்தில் நல்ல மாப்பிள எடுக்கிறதே கஸ்ரம். நீ கொடுத்து வைச்சவ. அது சரி சீதனம் கீதனம் ஒண்டும் மாப்;பிள கேக்கல்லையா?” என்றாள் வள்ளி.
“அப்படி ஒண்டும் கேக்கல்ல நாங்களும் கதைக்கல்ல. அவசரமா காசு ஒரு லெட்சம் வேணும் பிறகு தாறன் எண்டு பிள்ளட்டகேக்க பிள்ளையும் வட்டிக்கு வாங்கி ஐம்பதாயிரம் கொடுத்தது. அவ்வளவுதான் கொடுக்கல் வாங்கல். வீட்டு நடப்பு வந்து போற அவருக்குத் தெரியும் தானே ! சொல்லியா தெரியணும்!”
“ பிடிச்ச பிடிய நல்லாத்தான் பிடிச்சிருக்கா எத்தன நாளுக்கு கஸ்ரப்படுற. கடவுளுக்கும் தெரியும் தானே மாரி” என்றாள் வள்ளி.
“பாத அடிக்கப் போகுது கவனமா பிடிச்சுக் கொள்ளுங்க” பாதையை ஓட்டுபவர் சொல்லி எஞ்சினை நிற்பாட்டினாhர். கதைத்துக்கொண்டு நின்றதில் இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.
கையில் இருந்த இரண்டு கூடைகளையும் தூக்கிக்கொண்டு பாதையை விட்டு இறங்கினாள். தான் வைத்திருந்த கூடைகள் மிகவும் பாரமுடையவை. அதனால் அதனைத் தூக்கிக் கொண்டு நடந்து போக அவளாள் முடியவில்லை. குடும்ப வருமானத்தைப் பார்த்தால் ஓட்டோவில் போக முடியாது. ஆள் உதவி இல்லாத அவள் என்ன செய்ய முடியும். வள்ளியுடன் அவளும் போய் ஓட்டோவில் ஏறினாள். ஓட்டோ வீட்டடியில் நின்றது. “எவ்வளவு தம்பி?” “முப்பது ரூபாய்”. ஓட்டோக்காரன் சென்று விட்டான். “கட்டாயம் வருவண்டி” வள்ளியும் சென்று விட்டாள்.
பொழுதும் கருகத் தொடங்கிவிட்டது. விடிந்தால் கலியாணம். தேடிஎடுக்கவேண்டியவை வாங்க வேண்டியவை எல்லாம் வாங்கி முடிந்து விட்டது. கலியாணத்துக்கென்று கந்தப்போடியாரிடம் வட்டிக்கு வாங்கிய இருபத்தையாயிரம் ரூபாவும் கிட்டத்தட்ட முடியும் தறுவாய்க்கு வந்து விட்டது. வீட்டு மூலையில் வாங்கி கட்டித்தூக்கி வைத்திருந்த வாழைக்குலைகள் பழுத்து மணம் வீசிக் கொண்டிருந்தன. நாளை திருமண பந்தத்தில் இணைப்போகும் தனது மூத்தமகள் மாலாவை நினைத்தால் மாரிக்குப் பெருமை. இருபத்தெட்டு வயதாகும் மாலா நல்ல குணநலம் மிக்கவள். எந்தவிதமான கெட்ட நடத்தைகளும் இதுவரைஅவளிடம் காணப்பட்டதில்லை. குடும்ப வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல புத்திமதிகளை பல நாட்களாக கூறியிருக்கிறாள். அப்போதும் தன் மூன்று பிள்ளைகளையும் கூப்பிட்ட மாரி “சொல்லவேண்டியாக்களுக்கு எல்லாம் சொல்லித்தன.; நாளைக்கு ஏழுமணிக்கு கழுத்தில தாலி ஏறனும். மாப்பிளத்தத்திக்கு ஒரு கெழமைக்கு மொதல்ல சொல்லியாச்சி. அவயளுக்கு நடமொற தெரியும் தானே. நீங்க நாளைக்கு நாலுமணிக்கு எழும்பி நாளைய வேலையள சீக்கிரமாச் செய்யணும்.”
மணப்பந்தல் அலங்கரிக்கும் வேலை மும்முரமாக இடம் பெற்றுக்கொண்டிருந்தது.படலையை உயர்த்திக் கட்டி இரண்டு பக்கமும் சுந்தரன் தலைமையில் வாழைமரம் கட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றது. “ வாழ மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம். அந்த ஐர மீனுக் குஞ்சிக்கெல்லாம் ஊர் கோலம்…….” பாட்டைப்படித்தான் பாலன்: ஊரில் நடக்கும் எல்லாக் கலியாணத்திற்கும் அவன் போவான் : சிரிக்க வைக்க வேண்டுமென்றே ஏதாவது பாட்டு அல்லது ஏதாவது சொல்லுவான்.
“மாரியக்க வாங்கின கயிறு கிடக்கா” வாழைமரம் கட்டிக்கொண்டிருந்த சுந்தரன் கேட்டான். “ஓ….! வாறன்” மாரி ஒரு முடிச்சுக் கயிறோடு வெளியால் வந்தாள். எல்லா வேலையும் முடிந்து விட்டது. ஓறுத்துக் கிடந்த வானம் கருக்கொண்டு கிடந்தது போல அவளது வீடு வேட்கை ப+ர்த்துக் கிடந்தது.
‘மறந்து போய்த்தன் கந்தண்ண பாலுகொண்டு வந்தவரா? மாலா” என்றாள் மாரி “ஓம் அம்மா பத்துப் போத்தல் கூடக் கொண்டு வரச் சொன்னெண்டு முப்பது போத்தல் கொண்டு வந்தவரு”
நாளை நடக்கப் போகும் சந்தோசமான நிகழ்வை நினைத்தப் பார்த்த மாலாவின் உள்ளம் ப+ரிப்பால் விரிந்தது தனது அம்மாவுக்கச் சுமையாக இருந்த தனது திருமண விடயம் நிறைவேறுவதால்அம்மா இனி சந்தோசமாக , மனப்பாரம் குறைந்து வாழ முடியும் என்னும் நினைப்பு அவளுக்கு.
மாரியின் கணவன் அவளை விட்டு பிரிந்து போய் பதினாலு வரு~ம். ஒரு கிழமையில் எப்படியும் ஒரு நாள் தப்பினால் இரண்டு நாள்தான் அவளது புரு~ன் வீரன் வேலைக்கு போவான். உழைப்பது குடிக்கவும் போதாது. அப்படியிருந்தும் இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்து கடைசியில் மூன்று பெண்பிள்ளைகளையும் விட்டுப்போட்டு போன பொறுப்பற்றவன் அவன். எனினும் மாரி சோரவில்லை. குடும்பத்தலைவியாக மாரி நெல்லுக்குத்தி அரிசி இடித்து விற்று தன் குடும்பத்தை இந்த நிலைவரக் கொண்டு வந்து விட்டாள். நாளை நடைபெறவிருக்கும் திருமண நாளுக்கு வாழ்த்துச் சொல்வது போல வானமும் சிறிது இருண்டு ஒரு பாட்டம் மழையும் பெய்து விட்டது.
இரவு எட்டு மணியாகிவிட்டது. வரவேண்டியவர்கள் வந்து முகத்தைக் காட்டிச் சென்று விட்டார்கள். இனி அவர்கள் நாளைக்குத்தான். மாலாவின் கையடக்கத் தொலைபேசி ஒலித்தது. போய்ப் பார்த்தாள். அவளது மாப்பிள்ளை. சந்தோ~சப்ப+க்கள் உள்ளத்தில் மலர, ‘கலோ’ என்றாள். நாளைக்கு நான் கட்டாருக்கு போறன் வந்துதான் கல்யாணம்”. போன் சத்தமற்று அமைதி கொண்டது. நெஞ்சில் இடிவிழுந்தது போல இருந்தது. கண்களில் பெருந்துளியாய் நீர் சுரக்க “ அம்மா” என்று விழுந்து அழத்தொடங்கினாள். மாரி ஓடிவந்து “என்ன மகள் என்ன?” கத்திக் கொண்டு கேட்டாள். “அவரு நாளைக்கு கட்டாருக்கப் போகப் போறாராம்”. எல்லோரும் சேர்ந்து அழுதனர். அவல ஓலம் போலவே ஊரெங்கும் ஒலித்தது. யாரோ இறந்து விட்டார்கள் என்று நினைத்து ஊரிலுள்ளோர் ஓடிவந்தனர். முற்றமெல்லாம் சனக் கூட்டம் நிரம்பி வழி;ந்தது.
வேலனின் சமீப காலச் செயற்பாடு , பொய்யாகிப்போன அவனது வார்த்தைகள் எல்லாம் அவன் இனி ஒரு போதும் தன்னை திருமணம் செய்யமாட்டான் என்பதனையே மாலாவுக்க உணர்த்தின. ஏங்கி ஏங்கி அழுதாள். என்ன செய்வதென்று தெரியாமல் தினறினாள்.
பலரும் ஆறுதல் கூறிச் சென்றனர். “வேலனைச் சம்மதிக்க வைச்சி நாளைக்கு கலியாணத்த முடிச்சிரலாம்”. ஊர் பெரியவரும் அப்படித்தான் கூறினார். மாரி பலதையும் யோசித்தாள். சந்தோ~க்களிப்போடு செய்த அத்தனை வேலைகளும் கவலைமேல் கவலை கொள்ளச் செய்தன அவளுக்கு. வேலன் கட்டாருக்கு போவது உறுதியாக தெரிந்து விட்டது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. கலகலப்பு ஒய்ந்து விட்டது.
மாலாவின் போன் மீண்டும் ஒலித்தது. போனை கதைக்க மாலாவுக்கு பிடிப்புற்று இருந்தது. மாரி போனை எடுத்து “கலோ” என்றாள். “நான் சீலன் கதைக்கிறன்”. சொல்லுமகன்”. “நடந்தது எல்லாத்தையும் அறிஞ்சன் மாமி. மாலாவை நான் கட்றன் எண்டு ஏற்கனவே சொன்னன். உங்கட மாலா கேட்கல்ல மாமி. மானம் கெட்டவன் எண்டு என்ன நினைக்காதிங்கோ மாலாவோட நான் வச்ச காதல் இன்னும் குறையல்ல. மாலா செரியண்டா நான் நாளைக்கு கலியாணத்திற்கு செரி. கேட்டுத்து சொல்லுங்க”. அவ்வளவுதான் சீலனின் தொடர்பு நிறுத்தப்பட்டுவிட்டது. மாரியின் மனசில் புதிய நம்பிக்கை ஒளி கொண்டது. சீலன் தன்னிடம் மாலாவைக் கல்யாணம் செய்து தரும்படி பலதடவை கேட்டதையும் அவனுக்காக மாலாவிடம் பல தடவை கதைத்ததையும் நினைத்துப்பார்த்தாள்.
நேராக மாலாவிடம் சென்றாள். சீலன் கூறியதைக் கூறினாள். இருவரும் கண்கள் நனைய கட்டிப்பிடித்து அழுதார்கள். சிறிது நேரம் மாலா மௌனமாக இருந்தாள்: மனதை மாற்றிக் கொண்டாள். வாழவென்றே துணிந்தாள். “சீலன்விருப்பம் கேட்டு கெஞ்சியும் ஒண்டும் சொல்லாத நான்தான் முட்டாள். அம்மா! நாளைக்கு கல்யாணத்திற்கு நான் சரி”. குரல் கணக்க கூறினாள் மாலா. அரைத்தூக்கத்தில் கிடந்த இளைய மகள் எழுந்து “யாரம்மா மாப்பிள்ளை”. நம்மட சீலன் அத்தான்தான்………

No comments:

Post a Comment