Sunday, November 20, 2011

உலக இலக்கியங்களின் வரிசையில் ஸ்காண்டிநேவிய நாவல்கள் பெறும் முக்கியத்துவம்

1. அறிமுகம்
உலக இலக்கியங்களின் வரிசையில் ஸ்காண்டிநேவிய நாவல்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. நோர்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளை ஸ்காண்டிநேவிய நாடுகள் என்று அழைக்கின்றனர். இவை ஒருவகையான புவியியல் தன்மை கொண்ட நாடுகளாக உள்ளன. அதனாலேயே உலக இலக்கியங்கள் என்னும் பார்வையில் பொதுவான மன உணர்வுகளைத் தாங்கித் தனித்துவமாக வெளிவரும் நூல்களில் பெரும்பாலானவை இந்நாடுகளிலிருந்து வெளிவருகின்றன. இதனை இன்னொரு விதமாகச சொல்வதாயின் இத்தன்மை இந்நாட்டு நாவல்களின் பிரதான பண்பு என்றும் கூறலாம்.
உலக இலக்கியங்களை நோக்குகின்ற போது அவை பல்வேறு வித்தியாசப்பட்ட தன்மை கொண்டவை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அடக்குமுறைக்கு எதிரானவை(1), பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டவை(2), பெண்ணிய(3), தலித்திய (4)சிந்தனையுடையவை, பொதுவான மன உணர்வுகளைத் தாங்கியவை(5) என்றவாறு வெளிவந்துள்ளன. இப்பண்புடைய இலக்கியங்கள் அனைத்தும் எல்லா நாட்டு அரசியல், பண்பாட்டு சூழல்களையும் பிரதிபலிக்கக் கூடியவை என்று கூறிவிட முடியாது. குறிப்பாகச் சொல்வதாயின் அடக்குமுறைக்கெதிரான குரல்கள், பலஸ்தீனம், ஆபிரிக்கா, இலங்கை போன்ற அரசியல் போராட்ட சூழ்நிலைகளை முன்போ, பின்போ கொண்ட நாடுகளுக்கே பொருந்தும். அதே போன்று தலித்தியம், இந்தியாவுக்கு பொருந்தும், பெண்ணியம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலேயே கூடுதலாகப் பேசப்படுகின்றது.
ஆனால் காதல், பசி, இரக்கம், அன்பு போன்ற மன உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவையாக, பொருந்தக்கூடியனவாக உள்ளமையினை அவதானிக்கலாம். இப்பண்புகளே ஸ்காண்டிநேவிய நாடுகளின் நாவல்களின் முக்கியமான கருவாக அமைந்து உள்ளன. அதனால் இத்தகைய பண்புகளைக் கொண்ட ஸ்காண்டிநேவிய நாவல்கள் உலக இலக்கியங்களில் முக்கியமானவையாக உள்ளன எனலாம். இலக்கியமும் அரசியலும் மிகவும் இணைந்ததாக இருக்கும். இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கு குறிப்பிட்ட ஒரு நாட்டின் அரசியல் பற்றிய புரிதல் அவசியமானதொன்றாகும். ஆனால் ஸ்காண்டிநேவிய நாவல்களில் இத்தன்மையைக் காண முடியாது. அவை படிப்பவர்களை மிகவும் ஈர்க்கக் கூடியனவாக மன உணர்வுகளைத் தட்டியெழுப்பக்கூடியனவாக உள்ளன. அவ்வகையில் உலக இலக்கியங்களுள் ஸ்காண்டிநேவிய நாவல்களுக்கு பிரதானமான இடம் உண்டு என்று துணியலாம். இத்தன்மையை விளங்கிக் கொள்வதற்கு இங்கு பசி (நோர்வே), நிலவளம் (நோர்வே), குள்ளன் (சுவீடன்), மதகுரு (சுவீடன்) ஆகிய நான்கு நாவல்கள் எடுத்தாளப்படுகின்றன.
2. ஸ்காண்டிநேவிய நாவல்கள்
2.1. ஒரு எழுத்தாளனின் வறுமை நிலை:- பசி
ஸ்காண்டிநேவிய நாவல்களுள் ‘நோர்வே’ நாட்டைச் சேர்ந்த நட்ஹாம்சன் எழுதிய பசி நாவல் தனித்தவமானது. நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றிபெற்ற நட்ஹாம்சனின் முதல் நாவல் இது, பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது நிலவளம் 1920 இல் நோபல் பரிசு பெற்றது. பசி ஒருவனின் உடலையும் உள்ளத்தையும் அவனது கற்பனையையும் எவ்வாறு வாட்டுகின்றது என்பதை மிகவும் சிறப்பாக இந்நாவல் சொல்லுகின்றது. அவ்வகையில் உலக நாவல் இலக்கிய வரிசையில் ஸ்காண்டிநேவிய பசி நாவலுக்கு முக்கியமான இடம் உண்டு எனலாம்.
பசி, எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு உணர்வு. பணம் கையில் வைத்தருப்பவன் பசி ஏற்படும் போது அதனைச் சாதுரியமாக வென்று விடுகிறான். அது அவனுக்கு பெரிய பிரச்சினையாகவோ, சவாலாகவோ இருக்காது. ஆனால் பணம் இல்லாவிட்டால் பசி, ஒரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய அத்தனை அட்டூழியங்களையும் செய்துவிடும். இந்நாவலில் நிரந்தரமான வருவாய் தரும் தொழிலற்ற ஒரு எழுத்தாளனை பசி எவ்வாறு துன்புறுத்துகிறது, பணம் கிடைக்கும் போது அவனுடைய மனநிலை எத்தகையது, பணம் தீர்ந்துவிட்ட பின் அவனுடைய மனநிலை எத்தகையது என்பதை மிகவும் சிறப்பாகக் காட்டியுள்ளார் ஆசிரியர். இந்நாவலை மொழி பெயர்த்த க.நா.சுப்ரமண்யம் அந்நூலின் முன்னுரையில்,
“பசியினால் ஓர் எழுத்தாளன் படும் அவதியைக் கூட ஒரு நவினத்துக்கு கருப்பொருளாகக் கொள்ள முடியும் என்று சிறந்த முறையில் இதனை ஆசிரியர் படைத்துள்ளார்”01
என்று கூறியுள்ளமை அதன் சிறப்பை மேலும் அழுத்தியுரைப்பதாக உள்ளது.
நாவலின் கதையைச் சுருக்கமாகக் கூறுவதனால், இந்நாவலில் வரும் தலைமைப் பாத்திரம் நிரந்தர தொழிலற்ற ஒருவறிய எழுத்தாளன். பத்திரிகைகளுக்குக் கதை எழுதுகிறார். அதில் நம்பிக்கை கொண்டு பணத்திற்காகக் காத்திருக்கிறார். பணம் வருகின்ற போது சந்தோசப்பட்டு பின் பணம் முடிந்ததும் பசியால் வாடிவிடுகிறார், கற்பனை, எழுத்தாற்றல் அனைத்தையும் இழந்துவிடுகின்றார். இருப்பதற்கும் நிரந்தர இடமில்லாது தவிக்கும் அவர் பசியைத் தாங்கிக் கொள்ள முடியாது மரத்துண்டுகளை, எலும்புத் துண்டுகளைக் கடித்து உண்ணுகிறார். அவருடைய பசிக்கும் வேதனைக்கும் இடையே அவர் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறார். அவளுக்கு முத்தமிடுகிறார், பின்னர் தன்னை முழுமையாகப் பிடித்திருந்த பசியாலும் அதனால் ஏற்பட்ட மனநிலையாலும் அவ்வுறவிலிருந்து விடுவித்துக் கொள்கிறார். நாடகத்தை எழுதத் தொடங்கி அதனைக் கிழித்து எறிந்து விடுகிறார். சில நேரங்களில் எழுதவும் முடியாது பசியால் வாடிக்கொள்கிறார். பின்னர் சரக்கு ஏற்றும் கப்பல் தலைவனுடன் வேலை தொடர்பாகக் கதைத்து அக்கப்பலில் ஏறிச்செல்கிறார்.
நாவலின் சிறப்புப் பற்றி பின்வரும் பகுதிகளை எழுத்தாள முடியும். (பின்வருமாறு நாவல் தொடங்குகிறது)
“அந்த நாட்களில் நான் கிறிஸ்டியானியா நகரில் ஊர் சுற்றிக் கொண்டு பட்டினியாகத் திருந்தேன். மிகவும் சிறந்த நகரம் கிறிஸ்டியானியா……..”02
பின்னர்,
“சென்ற சில நாட்களாகவே நான் சில்லரைக்கே க~;டப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒன்றன் பின் ஒன்றாக என் சாமான்களை எடுத்துப்போய், “மாமாவுக்கு” (அடகு பிடிப்பவனுக்கு) அர்ப்பணம் செய்தாகி விட்டது. எனக்கோ எரிச்சலும் கோபமும் தினத்துக்குத் தினம் அதிகரித்துக் கொண்டிருந்தது. தலை சுற்ற நான் சில நாட்களுக்குப் படுக்கையிலேயே கிடக்க வேண்டியதாக இருந்தது உண்டு. எப்பொழுதாவது ஒரு சமயம், அதி~;டம் இருக்கும் போது, ஏதாவது ஒரு பத்திரிகையிலிருந்து ஏதாவது ஒரு கட்டுரைக்கு ஐந்து பணம் வரும்”03
என்று கதை நகர்த்தப்பட்டு
“எனக்கு அவன் வேலை தந்தான்………..
கடலில் போய்க் கொண்டிருக்கும் போது மேல் தளத்துக்கு வந்து கிறிஸ்டியானியா நகரத்திடம் விடை பெற்றுக் கொண்டேன். இரவில் நகரத்து வீடுகளின் ஜன்னல்கள் பளபளத்தன.
இப்ப சத்தியா விடை பெற்றுக் கொள்கிறேன், அழகிய நகரே’’04
என்றவாறு கதை முடிவடைகின்றது. இவ்வகையில் நோக்கும் போது ‘பசி’ நாவல் சிறந்த ஒரு இலக்கிய படைப்பு என்று கூறலாம்.
2.2 நிலத்தின் பயன்பாடு:- நிலவளம்
இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றான ‘நிலவளம்’ பலரதும் கவனிப்பைப் பெற்றுத் திகழ்கின்றது. நட் ஹாம்சன் என்பவரால் எழுதப்பட்ட நோர்வே தேசத்து நாவல் இது.
நிலத்தின் முக்கியத்துவத்தையும் அதன் வளத்தையும் அதனோடு தொடர்புபட்ட பண்ணை வாழ்க்கையையும் இந்நாவல் எடுத்துக் கூறுகின்றது. பொருள் சார்ந்தும், கூறும் முறைசார்ந்தும் எப்போதும் எக்காலத்திற்கும் எத்தேசத்திற்கும் பொருந்தி நிற்கக்கூடிய தன்மை இந்நாவலுக்கு உண்டு. அத்தகைய வகையில் இந்நூலில் முழு நிறைவைப் பெற்றுத் திகழ்கின்றது எனலாம். மேலை நாட்டு நாகரீகம் என்று சொல்லப்படுவதன் வளர்ச்சியிலே நிரந்தரமான பல உண்மைகளை மனித குலம் மறந்துவிட முற்படுகிறது. இவ்வாறு மறந்து விடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை ஆசிரியர் இந்நாவலினூடாகச் சொல்ல வருகின்றார்.
நாம் தினமும் காணும் சாதாரண மக்களே நாவலில் வரும் பாத்திரங்களாக உள்ளனர். பண்ணை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்நாவலில் ஐஸக் (குடியானவன்) இங்கர் (அவன் மனைவி) ஆகிய இரு பாத்திரங்களே பிரதானமாக உள்ளன. அதாவது இப்பாத்திரங்களினூடாகவே நாவலின் பிரதான கதை நகர்த்தப்படுகின்றது. இந்நாவலில் ஜஸக்கின் பிள்ளைகள் (எல்யூஸிஸ், ஸிவெர்ட், லெபல்டின், ரிபெக்கர்) இங்கரின் உறவினர் (ஓலைன்) இரு பண்ணைக்காரர்கள் (ப்ரெட், ஆக்ஸெல் ஸ்டிராம்) பணக்காரன் ஆகிவிட விரும்பிய கடைக்காரன் (ஆரண்ஸென்) எனப்பல பாத்திரங்கள் வருகின்றன.
வாழ்க்கைக்கு உதவியாக மண்சார்ந்த இயற்கை வளங்கள் இருக்கின்றபோது அதனைப் பயன்படுத்தி வாழத்தெரியாமல் வேறுவழிகளில் பண ஆசை கொண்டு உழைக்க முற்படுபவர்களின் வாழ்வு இந்நூலில் தோற்றுப் போகின்றது, அவர்கள் வாழ்வை இழந்து போகின்றனர். இதில் வரும் ஆரண்ஸெக் என்னும் பாத்திரம் இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.
நாவலில் தொடக்கம் முதல் முடிவு வரை நிலத்தின் முக்கியத்துவமே பேசப்படுகின்றது, அதனோடு தொடர்புபட்ட விடயங்களே பேசப்படுகின்றன. வளமான நிலத்தைத்தேடி புறப்படுகின்றான் ஐஸக்.
“இடத்தைக் கண்டு பிடிப்பதுதான் மிகவும் சிரமமான காரியம். கண்டு பிடித்து விட்டான் இதுவரை இந்த நிலம் யாருக்கும் சொந்தமானதில்லை. இப்போது இது இவனுடையது. இப்போது, இனி அவனுக்கு வேலை நிறைய இருக்கிறது”05
பின் நிலத்தைப் பயன்படுத்தி வேலைகள் செய்யத் தொடங்குகிறான், பண்ணை அமைக்கின்றான். இங்கரும் இதில் இணைந்து கொள்கிறார் வாழ்வு தொடங்குகிறது.
“வஸந்த காலம் வருகிறது தன் நிலத்தைத் திருத்தி அதில் உருளைக் கிழங்கு விதைத்தான். அவனுடைய ஆடுகள் பெருகுகின்றன. இரண்டு ஆடுகளும் இரட்டைக் குட்டிகளாக ஈன்றன. இப்போது அவனுக்குச் சொந்தமாக ஏழு ஆடுகள் இருக்கின்றன…… எல்லா வழிகளிலும் அவன் வாழ்வு பிரகாசமாகிக் கொண்டிருக்கிறது.”06
நாவலில் சுரங்கத் தொழில் செய்யும் பாத்திரங்கள் வருகின்றன. அதில் ஈடுபட்ட பலர் நீண்ட -  நிலைத்த பொருளாதாரத்தை எய்த முடியாமல் போகிறார்கள். ஆனால் நிலம் எப்போதும் தன் வளத்தை இழக்காததாக இருந்து வருகின்றது.
“இப்போது செம்புச் சுரங்கம் என்கிற மாசு அந்த
நிலத்தில் இல்லை. அந்தப் பணமும் ஐசவரியமும்கூட”
அவனிடம் தங்கவில்லை. சுரங்க வேலை நின்றவுடனேயே அதனால் பணக்காரர்களாக நினைத்தவர்களெல்லாம் ஏழையாகி விட்டார்கள். ஆனால் ஆல்மென்னிஸ் நிலங்கள் அப்படியே இருந்தன, அழியாமல் இருந்தன, வளமாக இருந்தன, புதிதாகப் பண்ணைகள் பத்து ஏற்பட்டு இருக்கின்றன.
அங்கு என்ன விளையாதிருந்தது? எல்லாம் இருந்தது,
“மனிதர்கள், கால் நடைகள், நிலத்தில் விளையாது எல்லாம் இருந்தது………  மாலை வருகிறது, இருட்டுகிறது”07
என்று நாவல் முடிவடைகின்றது.
இந்த நாவலில் பிரதானமாக நிலம், அதன் வளம், இயற்கை, உழைப்பு என்பவையே முக்கியப்படுத்தப்பட்டுள்ளன. இந்நாவலின் பொருட் சிறப்புக்கு அப்பால் பிறிதொரு சிறப்பு யாதெனில் கதை வைபிள் நடையில், கூடுதலான தகவல்களை உட்கொண்டு, வர்ணணைகள் அதிகம் இல்லாதனவாக ஆனால் வாசிப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளமையென்று கூறலாம்.
2..3 சமூக மாற்றம் - மதகுரு
உலகெங்கனும் குடிபோதை மனித சமூகத்தைச் சிர்குலைத்துக் கொண்டு வருகின்றது. மதகுரு என்னும் இக்கதை இக்கருப் பொருளைத் தாங்கி சமூக மாற்றத்தை நோக்கி எழுதப்பட்டதாக உள்ளது. இந்நாவலில் சொல்லப்பட்டுள்ள இக்கதை எல்லா நாட்டில் உள்ளவர்களுக்குமே பொருந்தக் கூடியது. சுவீடன் தேசத்து நாவலாகிய இதனை ஸெல்மாலாகர்லெவ் எழுதியுள்ளார்.
‘கெஸ்டா பெர்லிங் ஸாகா’ என்னும் இந்நாவலை ‘மதகுரு’ என்று மொழி பெயர்த்தார் க.நா.சுப்பிரமண்யம். அவர் இந்நாவலின் முன்னுரையில்
“கெஸ்டா பெர்லிங்க்கு ஈடான வேறு நூல் உலக இலக்கியத்தில்  மிகவும் சிலவேதான் இருக்கின்றன என்றே கருதுகின்றேன்”08
என்று கூறுவதும் ‘உலகில் சிறந்த நாவல்கள்’ என்னும் தனது நூலில் இவரை இந்நாவலை கெஸ்டாவின் கதை என்று மொழி பெயர்த்து,
“சாதாரணமாக, டாஸ்டாவ்ஸ்கி என்னும் ரு~pய மேதையின் ‘கரமஸாவ் சகோதரர்கள்’ என்னும் நாவலை நாவல் இலக்கியத்தின் ஒரு எல்லைக்கோடு என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள். அதே போல ஸெல்மா லாகர்லெவின் கெஸ்டாவின் கதை என்னும் நாவலை நாவல் இலக்கியத்தின் ஒரு எல்லைக்கோடு என்பதை அதைப் படிப்பவர்கள் எல்லோருமே ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள்”09
என்று கூறுவது இந்நாவலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றதெனலாம்.
ஓரு மத குரு ஆரம்பத்தில் குடிகாரனாக இருந்து பின்னர் அதிலிருந்து திருந்தியவனாக வாழத் தொடங்குவதை இந்நாவல் பிரதான கதையாகக் கொண்டுள்ளது. கெஸ்டா பெர்லிங் என்னும் மதகுரு தெய்வ உள்ளம் படைத்தவனாக இருந்தாலும் தனது கடமைகளைச் சரியாகச் செய்தவனாக, அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு (ஆலயத்தில் பிரார்த்தனை, பிரசங்கங்கள் செய்ய வேண்டிய நாட்களிலும் கூட) நடத்தை கெட்டுத் திரிகின்றான். பிறரது பொருட்களை (மாவையும், வண்டியையும்) விற்றுக் குடித்துவிட்டு பின்பு பிராயச் சித்தமாக இறந்துவிட நினைக்கிறான். பின்னர் உல்லாஸப் புரு~ர்கள் குழுவில் இணைந்து செயற்படுகின்றான். திருமணக் கடத்தல்களில் ஈடுபடுகின்றான், மேரியான் ஸிங்க்ளேர், அன்னா ஸ்டார்ண்யாக் என்னும் இரு பெண்கள் அவனைக் காதலித்தனர். எனினும் அவன் எலிஸபெத் டோனா என்பவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.
ஆரம்பத்தில் லாயக்கற்றவன் குடிகாரன் என்று பலவாறு தூற்றி அடித்து விரட்டப்பட்ட கெஸ்டா என்னும் மதகுரு பின்னர் உலகம் போற்றும் உத்தமனானான். சொத்துச் சுதந்திரங்களில் ஆசையற்றவனாகி கடைசியில் கெஸ்டா எலிஸபெத்துடன் காட்டு ஓரத்தில் தன்னை அண்டி வந்தவர்களுக்கெல்லாம் பல உதவிகள் செய்தான். தச்சு வேலை செய்து சம்பாதித்து வாழ்வை நடத்தினான். நோயாளிகளுக்கு சிகிச்சை செய்தான், சமூகத்துக்குபு; பணி செய்தான். கெஸ்டாவையும் எலிஸபெத்தையும் எல்லோரும் புகழ்ந்து போற்றினார்கள். காவியத்தில் வரும் அற்புதமான மனிதர்கள் போல் கெஸ்டாவும் ஒருவர் என்று கூறுவதுகூட தவறாக இருக்காது.
அற்புதங்களையும், அதிசயங்களையும் மிகவும் லேசாக நம்பும்படியாக சொல்லி இருக்கின்றார் ஆசிரியர் என்பது மட்டுமல்ல ஒரு காவிய நயத்துடன் சொல்லியிருக்கிறார் எனலாம். க.நா.சுப்ரமணியம் இந்நாவலின் முன்னுரையில் பின்வருமாறு கூறும் கருத்து இந்நாவலின் சிறப்பைத் தெளிவு படுத்துவதாக அமையும்.
“கதை சொல்வதில் செல்மா லாகர்லெவின் பாணி அலாதியானது.  கலையை மணக்கும் ஒரு கலையுடன், எளிய உதாரணங்களுடன்,  கவித்துவம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி, ஒரு சம்பவத்தை  உருவகப் படுத்துகிறாள். இந்த மாதிரிக் கதை எழுதியவர்கள், காவியம் எழுதிய கவிதைகளைத் தவிர வேறுயாருமில்லை என்று தைரியமாகக் கூறலாம்.”10
ஒரு நல்ல கதையும் சிறந்த உத்தியும் கொண்ட நாவல் உலகத்திற்கு உயர்த்திப் பேசப்படும் என்பதற்கு மதகுரு என்னும் நாவல் சிறந்த எடுத்துக் காட்டு. ஆக, ஸ்காண்டிநேவிய நாடுகளின் நாவல்களில் இந்நாவல் ஒரு தனித்தரமும் முக்கியத்துவமும் உடையது என்பதில் சந்தேகமில்லை.
2.4 மனித மனதில் தோன்றும் உணர்வுகள் பற்றிய விபரிப்பு:- குள்ளன்
உலகப் புகழ்பெற்ற நவீனங்களில் ஒன்றாகிய குள்ளன் என்னும் நவீனம் கதையமைப்பாலும் கதையம்சத்தாலும் விசித்திரமானதொன்றாக உள்ளது. ஸ்காண்டிநேவிய நாடான சுவீடனைச் சேர்ந்த பர்லாகர் க்விஸ்ட் என்பவரே இதன் ஆசிரியர்.
இயற்கையினால் வஞ்சிக்கப்பட்டுப் பிறக்கின்ற குள்ளர்களிலிருந்து வித்தியாசப்பட்ட, ஒரு குள்ளனது கதை இது. குள்ளர்கள் பற்றிய சமூகக் கருத்துருவாக்கத்தைக் கேள்விக் குள்ளாக்கி அறிதிறனாலும், புலமையினாலும் உயர்ந்த ஒரு குள்ளனே கதையை நடத்திச் செல்கின்றான். மனிதனுடைய மனதில் நன்மைக்கும் தீமைக்கும், லட்சியத்துக்கும், நடைமுறைக்கும் ஏற்படும் போராட்டத்தை மிகவும் சிறப்பாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர். இவ்வாசிரியருக்கு 1951ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
நாவலில் வரும் குள்ளன் தன்னை அறிமுகப்படுத்தும் விதம் சிறப்பானது. சிறப்புகருதி அப்பகுதியில் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகின்றது.
“இரண்டடி இரண்டு அங்குல உயரம்தான் நான். நல்ல அமைப்பும் சீரும் கொண்ட உடல், தலை மட்டும் சற்று பெரிது, மற்றவர்களைப்போல என் தலைமயிர் கறுப்பு அல்ல. சற்றுறச் செந்நிறம், கட்டையாக விறைப்பாக  இருக்கும். நெற்றியிலிருந்து பின்னால் இழுத்து வாரியிருப்பேன். நெற்றி  அகலம்தான் ஆனால் உயரம் அல்ல. முகத்தில் தாடி கிடையாது மற்றப்படி எல்லா மனிதர்களையும் போலத்தான் புருவங்கள் இரண்டும் கூடுகின்றன. தேக பலம் அசாத்தியம். அதுவும் யாராவது என் வழிக்கு வந்து விட்டால் அந்தப் பலம் வளர்ந்து விடும்....... ஆஸ்தானத்தில் குள்ளன் நான் ஒருவன் தான்”11
கோமாளித் தன்மையுயடைய குள்ளர்கள் போல் இல்லாத இந்தக் குள்ளன் அரச சபையில் அரசனுக்கு மது ஊற்றிக் கொடுக்கவும் இளவரசியின் காதலனுக்குரிய தூதுவனாகவும் இருக்கிறான். இக்குள்ளர்களிடமே இளவரசி காதல் கடிதங்களை அனுப்புகிறாள். இதனை பின்வரும் பகுதி எடுத்துக் காட்டும்.
“ தன் அறைக்கு என்னை அழைத்து நான் சொல்ல வேண்டிய செய்திகளை என் காதோடு காதாகச் சொல்லுவாள் அவள். என்னுடைய சட்டைப் பைக்குள் காதல் கடிதங்களை மறைத்து வைப்பாள்”12
ஆனால் இக்குள்ளன் இளவரசியின் காதலர்களை வெறுக்கின்றான். இதனை,
“அவர்களுடைய காதலர்கள் எல்லோரையும் நான் வெறுக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கத்தியால் கிழித்து ரத்தம் பெருகப் பார்க்க வேண்டுமென்பது என் ஆசை”13
என்னும் பகுதி எடுத்துக் கூறுகின்றது.
குள்ளர்களுக்கு எதுவும் தெரியாது அவர்கள் மது ஊற்றிக் கொடுக்கவும் கோமாளித் தன்மைக்குமே ஏற்றவர்கள் என்றே அரசனும் அரசியும் நினைத்து இக்குள்ளனையும் நடத்துகின்றனர். ஆனால் இவன் எல்லா ரகசியங்களையும் அறியும் திறன் கொண்டவனாக உள்ளான். கடைசியில் இந்தப் பிரத்தியேகமான அறி திறன் அவனது ஆற்றலுக்கும் அறிவுக்கும் வீழ்ச்சியாக இருந்து விடுகிறது. இளவரசி இறந்ததற்கு குள்ளனே காரணம் என்று விலங்கிடப்படுகிறான் கடைசியில்,
“விலங்கில் கட்டுண்டு உட்கார்ந்திருக்கிறேன் நான், நாட்கள் ஓடுகின்றன ஒரு சம்பவமும் நேரவில்லை மகிழ்ச்சியில்லாத வெறும் சூன்ய வாழ்க்கை ஆனால் குறை சொல்லாமல் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் …….. என் விலங்கைத் தளர்த்து என்னை விடுவிக்கும் நாளைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன.; இளவரசர் எனக்குச் சொல்லி அனுப்பி விட்டால் இந்த விலங்கு தளர்ந்து தாகே ஆக வேண்டும்.”14
இக்கதையில் வரும் குள்ளனுக்கு மற்றவர்களின் சிரிப்பு, சந்தோசம், காதல், கெட்ட நடத்தை, விபச்சாரம் எதுவும் பிடிக்காது. தன்னைப் போன்ற ஆனால் கோமாளிகளாக இருக்கும் குள்ளர்களையும் அவனுக்குப் பிடிக்காது. தான் குள்ளனாக இருப்பதைப் பற்றியும் அவனுக்குக் கவலையில்லை. தான் உயர்ந்தவன், பலம் மிக்கவன் என்னும் நினைப்பு அவனுக்கு உண்டு. ஆக மனித மனத்தின் உணர்வு நிலையை அதன் பாய்ச்சலை மிகவும் விசித்திரமாகச் சொல்வதன் மூலம் உலக நாவல் இலக்கிய வரிசையில் ஸ்காண்டிநேவிய நாவலான “குள்ளன்” தனித்துவமான இடத்தைப் பெற்றுவிட்டதென்பதுதான் உண்மை.
3. தொகுப்பும் முடிவும்
ஸ்காண்டிநேவிய நாவல்களுள் பிரதான இடத்தைப் பெற்றுள்ள பசி, நிலவளம், மதகுரு, குள்ளன் ஆகிய நான்கு நாவல்கள் பற்றி இங்கு நோக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் நோக்கத்தக்க மேலும் பல நாவல்களும் உள்ளன. வாசிக்கக் கிடைக்கவில்லையாகையால் இவை பற்றி இங்கு நோக்க முடியவில்லை.
பசி நாவல், ஒரு மனிதனை, அவனது உள்ளம், செயல் என்பவற்றை எவ்வாறு கட்டுப் படுத்துகிறது, அது அவனை எவ்வாறு வாட்டுகிறது என்பதை; எடுத்துரைக்கிறது. மண்ணின் வளத்தை அதுசார்ந்த வாழ்க்கை முறையை நிலவளம் எடுத்துக் கூறுகின்றது. ஆரம்பத்தில் குடிகாரனாக இருந்து பின்னர் சமூகம் மதிக்கும் சிறந்த காவிய நாயகனாக மாறும் ஒரு மனிதனை (மதகுருவை) “மதகுரு” என்னும் நாவல் மனக்கண்முன் நிறுத்துகின்றது. மிகவும் வித்தியாசமாகப் படைப்பட்டுள்ள “குள்ளன்” நாவல் மனித மனத்தில் தோன்றும் உணர்வு நிலையை அதன் இயங்கு நிலையை அப்பட்டமாகச் சொல்லி நிற்கிறது. ஆக இந்நாவல்கள் அனைத்தும் எல்லோருக்குமான பொதுவான மன உணர்வுகளைப் பிரதிபலித்து நிற்பதனைக் காணலாம். இத்யாதியான பண்புகளை ஸ்காண்டிநேவிய நாவல்கள் கொண்டுள்ளதன் மூலம் அவை உலக இலக்கியத்தில் சிறப்பான இடத்தில் வைத்து நோக்கப்படுகின்றன எனலாம்.
எனவே “ஸ்காண்டிநேவிய இலக்கியத்தில், ஸ்வீடிஷ், நார்வே பாஷை இலக்கியங்கள் வெகுவாக வளர்ந்து, இன்றுள்ள எந்த இலக்கியத்துக்கும் ஈடு சொல்லக்கூடிய அளவில் வளர்ந்திருக்கின்றன. ஒரு நூற்றாண்டிற்குள் ஏற்பட்ட இந்த வளர்ச்சி பிரமாதமானது.”15; என்று க.நா.சுப்பிரமண்யம் தான் மொழி பெயர்த்த ‘மதகுரு’ நாவலின் முன்னுரையில் கூறுவது போல ஸ்காண்டிநேவிய நாவல்கள் ஒரு உன்னதமான இடத்தில் இருக்கின்றன. இது பற்றிய ஆய்வு தமிழில் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவை உள்ளது.

அடிக்குறிப்புக்கள்
1. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), பசி, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், 1987,பக்.4
2. மேலது, பக்;. 5
3. மேலது, பக்;. 5
4. மேலது, பக்;. 200
5. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), நிலவளம், மருதா, டிசம்பர் 2003( இரண்டாம் பதிப்பு),பக்.11
6. மேலது, பக்;. 14                 7. மேலது, பக்;. 364-365
8. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ2001.பக். எi
9. சுப்ரமணியம்.க.நா, உலகின் சிறந்த நாவல்கள், மணிவாசகர் பதிப்பகம், 1990(முதற்பதிப்பு),பக்.9
10. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ2001.பக்.எii
11.பர்லாகர்க்விஸ்ட்(தமிழ்ஜானகிராமன்.தி), குள்ளன், சமுதாயம்பப்ளிகேஷன்ஸ்,அக்டோபர்1986(முதற்பதிப்பு),பக்.5
12. மேலது, பக்;. 9      13. மேலது, பக்;. 9
14. மேலது, பக்;. 212
15. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ2001.பக். எiii

மூல நூல்கள்
1. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), பசி, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், 1987
2. நட்ஹாம்சன்(தமிழில் சுப்ரமணியம்.க.நா), நிலவளம், மருதா, டிசம்பர் 2003( இரண்டாம் பதிப்பு)
3. செல்மா லாகர் லெவ்( தமிழில் சுப்ரமணியம்.க.நா.) மதகுரு, கவிதா பப்ளிகேஷன்ஸ், நவ. 2001.
4. பர்லாகர் க்விஸ்ட்(தமிழ் ஜானகிராமன்.தி),குள்ளன், சமுதாயம்பப்ளிகேஷன்ஸ்,அக்டோபர்1986(முதற்பதிப்பு)

No comments:

Post a Comment