Sunday, November 20, 2011

ஊர்க்குருவி




ஊர்க்குடிசை தோறும்
ஊர்க்குருவி கூடுகட்டி வாழும்
உலகத்தவர்க்கெல்லாம் - அது
உயர்ந்ததென்று தோன்றும்.

எமக்கும் குடிசை வீடு
அதற்குள்
அதற்கும் ஒரு கூடு
நோக்கும்போது எல்லாம்
பார்க்கும் கண்களை உருட்டி.

சோம்பலின்றி வாழும்
சோகம் இன்றிப் பாடும்
சொந்த முயற்சியில் கூட்டை
சேர்ந்து கட்டியெடுக்கும்

கூடி என்றும் திரியும்
குடும்பமாக வாழும் - சிலர்
கூடு கலைத்து விட்டால்
குடும்பத்தோடு குழறும்.

எனினும்
வாழவென்றே நினைக்கும்
வானமெங்கும் பறக்கும்
தேடி ஒரு கூட்டை
மீண்டும் கட்டி எடுக்கும்.

வண்ணமுட்டை இட்டு
வடிவாய் அடை காக்கும்
உடைந்து ஒன்று போயினும்
உயிர் வலிக்கத் துடிக்கும்

கொஞ்சிக் குலாவி வாழும்
குஞ்சும் பொரித்து மகிழும்
ஓன்று மாறி ஒன்று அதற்கு
கொண்டு கொடுக்கும் உணவு.

முயற்சியோடு வாழ்வதால்
பசித்து அவை கிடப்பதில்லை
பாம்பு பருந்து என்றால்
பயந்து நடுங்கி பறந்துவிடும்.

பட்டுப்போர்த்த மேனி – அதைத்
தொட்டுப் பார்க்கச் சொல்லும்
எட்டுப் போட்டு நடந்தால்
அழகை மனதில்
விட்டுப் போட்டுப் பறக்கும்.

கள்ளம் இன்றி வாழ்வதால்
தொல்லை நேர்ந்ததில்லை
அதன்
உள்ளம் பார்க்கவிரும்பினால்
ஊரில் வந்து பார்க்கலாம்.
-த.மேரா-

கிராமத்துப் பெண்




பொன்னாச்சி ஐயாவின்
பொண்டாட்டி குஞ்சம்மா
நெஞ்சில் வஞ்சமில்லாத தங்கம்மா

குழிவிழுந்த முகமும்
வெத்திலாக்குக்
கறைபடிந்த வாயும்
கோதிக் கட்டிய
நரை விழுந்த கொண்டையும்
செருப்பைப் பிடிக்காத
தேய்ந்து போன காலும்
பட்டென்ற பேச்சும்
படபடத்த நடையுமாய்
உலாவிய உருவம்

குளத்தில் குஞ்சு மீன் பிடிக்க
அத்தாங்கும் ஒமலுமாய்
குறுக்கக் கட்டோடு
புறப்படும் அணிக்கு
அவள்தான் தலைவி

புள்ள பொறந்தா
புள்ள பெரிசாகி
தண்ணி வாத்தா
யாரும் செத்தா
ஊருல உத்தியாக்களுக்குச் செய்தா
முந்திப் போய் பந்தியில
குந்தியிருந்து
எழும்பி வராட்டி
நிம்மதியில்ல அவளுக்கு.

வண்டில் மாட்டை
பேய் மறித்த கதை
குஞ்சம்மா
வரம்புக் கட்டில
குந்தியிருந்து காட்டுக்குப் போனபோது
கோயிலுக்குப் போக
கூட்டமாய் வந்த சனம்
பேயெண்டு
கீரிட்டு ஓடின கதையெல்லாம்
கூடிப் பழகினா
சிரிப்போட சொல்லிடுவா.

கட்டிய கணவனை
கண்ட பிள்ளைகளை
இயற்கையோ
கொடுத்துப் பறித்திட
நெஞ்சில் கவலையோடு
தனிமையில் இருந்தாலும் குஞ்சம்மா
மானத்தோடு வாழ்ந்து
கிராமத்துப் பெண்ணாய்
மண்ணோடு கலந்து விட்டாள்.

-த.மேரா-

புதிய மரண விசாரணை




“பல்லிகளைக் கொல்லாதீர்”
என
அறிவிக்கும் அரச வாகனம்
வீதியால
சென்று கொன்டிருந்தது.

அந்த அரச வாகனம்
சொல்லியது:
“பல்லிகளைக் கொல்லாதீர்”
அவைகளுக்கும்
அனைத்து உரிமைகளும் உண்டு.

அறிவிப்பின் ஈர்ப்பில்
மனம் நெகிழ்ந்து
சந்தோசமாய்த் தெருவோரம் நின்ற
பல்லியொன்றின் தலையில்
திடீரென
அரச வாகனம் ஏற
நச்சென்ற பல்லி
நடுவீதியில் பிணமாய்ச் சரிந்தது.

உயிர் காக்கும் பணியில்
உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதென
மரண விசாரணை
முடக்கப்பட்டது.

மீண்டும்
“பல்லிகளைக் கொல்லாதீர்”
என்ற அறிவிப்புடன்
அரச வாகனம்
நகர்ந்தது.

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை




சடசடத்துப் பெய்த
மழையின் குளிரில்
உள்ளம் நெகிழ்ந்திருந்த
ஒரு மாலை வேளையில்
பலாக்காரமாகப் பிரிக்கப்பட்ட
என் நண்பன்
நிச்சயப்படுத்தப்பட்ட
கால மழைபோல
திரும்பி வருவானென
எப்படி எதிர்பார்க்க முடியும்!

நேற்று….இன்று…..நாளையென
நாட்கள்
நிம்மதியைத் தொலைத்து விட்டபின்பும்
அவர்கள்
சொல்கிறார்கள்
என் நண்பன்
நாளை வருவானென

தேவையில்லை

இனி என் நண்பன்
எப்போது வருவானென்று
யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை

எனக்குள்
எப்போதும் இருக்கும் என் நண்பன்
இனி ஒருபோதும் வரமாட்டானென்று
இப்போது எனக்கு
உறுதியாகத் தெரியும்.

-த.மேரா-

சந்தி நாய்



வேட்டைப் பற்களை
கடைவாயில் கிட்டிக் கொண்டு
நாக்கு நீழ
ஈரற் குலை பிடுங்கும்
கொலை காரனைப் போல
யாருக்காக இந்த நாய்
காத்து நிற்கிறதோ!

பழக்க தோசமோ!
மேலதிக நேரமும்
பணியாற்ற வேண்டிய கட்டாய கடமையோ!
கால் வலிக்காதோ! கண்சோராதோ!

இனியும்
துரத்திக் கடிக்குமோ!
அதன் விசம் ஏறி இறந்தால்
விசாரனை எப்படி நடக்குமோ!
சாட்சி  சொல்ல யாரேனும் வருவார்களோ!
வைரவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமோ!

பள்ளி செல்லும் என் மகனை
விரட்டுமோ!
மனைவி வேலை விட்டு வரும் போது
கண்களை உருட்டிப் பார்க்குமோ!
என்னைக் கடித்து உண்பது பற்றி
திட்டம் வகுக்குமோ!
யாரிடமும் முறையிட்டால்
ஏதேனும் நடக்குமோ!
அடி மனதில் எப்போது அதற்கு
அன்பு ஊறுமோ
அன்றே அதற்கு எல்லோர் வீட்டிலும் விருந்து.
-த.மேரா-