Friday, November 25, 2011

மட்டக்களப்பு தமிழியலாய்வு வளர்ச்சியும் மகேஸ்வரலிங்கமும் - பேராசிரியர் செ.யோகராசா



ஆய்வு அல்லது ஆராய்ச்சி என்பதும் தமிழிற்குப் புதியதொரு முயற்சியாகவே கருதப்படுகின்றது. இவ்விதத்தில் தமிழின் முதல் ஆய்வாளராக கோல்ட்வெல் ஐயர் (1856) கருதப்படுகின்றார். ஆரம்பத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணம் என்பன சார்ந்திருந்த தமிழ் ஆய்வு காலப்போக்கில் மானிடவியல், வரலாறு சமூகவியல் முதலியனவற்றுடன் தொடர்புபட்டு தமிழியலாய்வு ஆகப் பரிணமித்தது. தமிழியலாய்வாளர் என்ற விதத்தில் ஈழத்தவரான மல்லாகம் வி.கனகசபைப்பிள்ளை முன்னோடி என்று கூறத்தக்கவர். “1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” என்பது அவரது ஆய்வு நூலாகும். இத்தகைய சூழலில் ஈழத்தில் மட்டக்களப்பு பிரதேச தமிழ்ஃதமிழியலாய்வின் வளர்ச்சி பற்றியும் அவ்வழி மகேஸ்வரலிங்கம் என்பாரது தமிழியலாய்வுப் பங்களிப்பு பற்றியும் கவனிப்பது பயனுடையது.
இவ்விடத்தில் இன்னொரு முக்கிய விடயத்தையும் நினைவு கூர்வதவசியம். ஆய்வு வளர்ச்சிக்கும் நவீன கல்வி முறையின் தோற்றத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நவீன கல்வி இரு விதங்களில் காலூன்றியது. மரபு வழி சார்ந்த தமிழ்க்கல்வி நவீன கல்வி முறைமைக்குட்பட்டது மட்டுமன்றி ஆங்கிலம், விஞ்ஞானம் முதலிய புதிய கற்கை நெறிகள் சார்ந்த நவீன கல்வியும் ஆக அது இருகிளைப்பட்டு வளரத் தொடங்கியது. இத்தகைய ஆய்வுச் சூழல் மட்டக்களப்பிலே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே முகிழ்ப்புற்றது எனலாம்.
மேற்கூறிய பின்புலத்தில் மட்டக்களப்பின் நவீன தமிழியலாய்வு முன்னோடியாக சுவாமி விபுலானந்தர் அமைகின்றார் விஞ்ஞானப் பட்டதாரியும் தமிழ்ப் பண்டிதருமான விபுலானந்தர் அவ்வாறு வெளிப்பட்டமை வியற்பிற்குரியதன்று. ஆயினும் தமிழ், இலக்கியம், மொழியியல், சமயம், தத்துவம், கலை, நாட்டாரியல், வரலாறு முதலான பல துறைகளிலும் ஈடுபட்டு அவர் தமது ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு முன்னரே வித்துவான் பூபாலப்பிள்ளை எழுதி ‘தமிழ் வரலாறு’ (1920) என்றொரு ஆய்வு நூலை வெளியிட்டிருப்பது குறிப்பிடற்பாலது.
அதுமட்டுமன்றி, மட்டக்களப்பில்,தமிழ் ஆய்வு தமிழியலாய்வாக பரிணமிப்பதற்கு அடித்தளமான முன்னோடி முயற்சி என்ற விதத்திலே எஸ்.ஓ. கனகரத்தினம் என்பவர் வெளியிட்ட Monograph of Batticaloa District of the Eastern Province of Ceylon (1921)என்ற நூலின் முக்கியத்துவம் பற்றியும் மறப்பதற்கில்லை.

ஆயினும், சுவாமி விபுலானந்தரை தொடர்ந்து அவ்வப்போது பண்டிதர் பூபாலப்பிள்ளை, புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை முதலானோர் தமிழ் ஆய்வு முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டு வந்திருப்பினும் ஐம்பதுகளின் பின்னரே அது உத்வேகம் பெறத் தொடங்கியது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் செயற்பாடுகளோடு அவற்றைவிட முக்கியமாக பல்கலைக்கழகக் கல்வி அறுபதுகளளவில் தாய்மொழிக் கல்வியூடாக பயில்கின்ற வாய்ப்புக் கிடைத்தமையே அதற்கான முக்கிய காரணமாகிறது. இவ்விதத்தில் பல்கலைக்கழகக் கல்வி முறைமையுடன் தொடர்புபடாத வித்துவான் F.X.C நடராசாவின் முயற்சிகளும் பண்டிதர் வீ.சி. கந்தையாவின் முயற்சிகளும் முக்கியமானவை. F.X.C நடராசாவின் சுயமான கட்டுரைகள் மட்டுமன்றி அவர் தொகுத்த மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும் (1960) என்பதும் முக்கியமானதொரு நூலாகின்றது. மட்டக்களப்பு தமிழியலாய்வு என்ற விதத்தில் அது கவனத்திற்குரிய முன்னோடி முயற்சியாகின்றது. வீ.சி.கந்தையாவின் ‘மட்டக்களப்பு தமிழகம் (1964) அவ்விதத்தில் மற்றொரு மைல்கல்லாகின்றது’.
பல்கலைக்கழக கல்வி முறைமையுடன் நேரடியாகத் தொடர்புபட்டவர்களென்ற விதத்தில் (தொழில் ரீதியிலே) பல்கலைக்கழகம் சார்ந்த சி.மௌனகுரு, இ.பாலசுந்தரம், சித்திரலேகா (உதயதேவி), நுஃமான் எனப் பலரும் இத்துறையில் பிரவேசித்து தமிழாய்வுத் துறையை அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் வந்த சூழலிலேயே (தொழில் ரீதியில் பல்கலைக்கழகம் சாராத) டி.சிவராம், வ.சிவசுப்பிரமணியம், வித்துவான் கமலநாதன், மகேஸ்வரலிங்கம் ஆகியோர் தமிழாய்விற்குள் பிரவேசிக்கின்றனர்.
-2-
மகேஸ்வரலிங்கம் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளுள் கணிசமானவை இரு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றுளொன்று. ‘மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு - ஓர் அறிமுகம்’ (1996). மற்றொன்று அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகிய ‘மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்| (2008).
இவ்விரு நூல்களும் மட்டக்களப்பு தமிழியலாய்வு வளர்ச்சியில் பெறுகின்ற முக்கியத்துவம் எத்தகையது என்பதே இ;வ்வேளை எமக்குள் எழுகின்ற வினாவாகின்றது.
மகேஸ்வரலிங்கத்தின் ஆய்வு முயற்சிகளுள் |மட்டக்களப்பு சிறு தெய்வ வழிபாடு ஓர் அறிமுகம் என்ற நூல்| ஓர் அறிமுகம் என்ற நூல் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றென்பதனை வலியுறுத்த வேண்டியது அவசியமன்று. ஏனெனில் இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிரதேச சிறு தெய்வ வழிபாடு பற்றி உதிரியான கட்டுரைகள் தவிர ஆழமான ஆய்வுகளெதுவும் நடைபெற்றிருக்கவில்லை. இவ்விதத்தில் இதுவே முதல் முயற்சியாகின்றது எனலாம். அது மட்டுமன்றி (1) தெய்வ பாகுபாடும் சிறு தெய்வ வழிபாடும் (2) மட்டக்களப்பும் சிறு தெய்வ வழிபாடும் (3) பெண் தெய்வங்கள் (4) ஆண் தெய்வங்கள் (5) சிறு தெய்வங்களுள் சிறு தெய்வங்கள் (6) பிதிர் வழிபாடு (7) பிற சமயத்தவரும் சிறு தெய்வ வழிபாடும் (8) வழிபாட்டு முறைகள் என்ற விதங்களி;ல் பரந்த அடிப்படையிலும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் மட்டக்களப்பு பிரதேச வழிபாடு பற்றி அணுக முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு பிரதேசத்தில் இத்தகைய கோயில்கள் அமைந்துள்ள ஊர்கள் பற்றிய அட்டவணையும் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட ஆய்வு நூல் தொடர்பாக, ஆய்வாளரொருவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
மட்டக்களப்பின் வரலாறு இன்னும் சரியானபடி இனங்காணப்படவில்லை. மட்டக்ளப்பின் வரலாற்றை உருவாக்க வாய்மொழி, கலை இலக்கியப் பாரம்பரியமும் இன்று நின்று நிலவும் மத நடைமுறைகள், கரணங்கள் என்பனவும் கர்ண பரம்பரைக் கதைகளும் மிகுந்த உதவி புரியக் கூடும். இந்த வகையில் திரு. மகேஸ்வரலிங்கம் இந்நூலிற் தரும் தகவல்கள் மிகுந்த பயனுடையவை|
மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்| நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பலவும் மட்டக்களப்பு பண்பாடு, சமயம், கலைகள் சடங்குகள், பிரதேச வரலாறுகள், ஆளுமைகள் முதலான பல்துறைகளும் சார்ந்தவை.
மேற்கூறியவற்றுள் சில, முதன் முயற்சிகளாம். மட்டக்களப்பு பண்பாட்டில் வீடும் வாழ்வும் என்பது இவற்றுள் முதன்மையானது. தலைப்பிற்கேற்ப ஊரும் வளவும், வீடு அமைப்பு, வீட்டமைப்பில் முக்கிய நிகழ்வுகள், குடும்பத் தலைமை, (வீட்டில்) சமய ஆசாரங்களைப் பேணல், (வீட்டில் நிகழ்கின்ற) சடங்குகள், (உ-ம் : திருமணம், மரணச் சடங்குகள்) என அகலமும் ஆழமும் பெற்று இக்கட்டுiரை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இவ்வாறெல்லாம் நோக்கும் போது இக்கட்டுரையில் வீடு என்பது மட்டக்களப்புச் சமூக நிலையை வெளிப்படுத்தும் குறியீடு ஆகியிருப்பது கண்கூடு).
தவிர மட்டக்களப்பு பிரதேசச் சமயமும் சமயத்துடன் தொடர்புபட்ட வழிபாட்டு முறைகளும் சடங்குகளும் சார்ந்த கட்டுரைகளே இந்நூலில் அதிகளவு இடம்பெற்றுள்ளன. இவற்றுள், மட்டக்களப்பின் பண்டைய சமயநிலை பற்றிய கட்டுரை பண்டைய கால பல்வேறு சமயங்கள் பற்றியும் சுருக்கமாக ஆராய்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் சுருக்கமாக இடம்பெற்றவற்றுள் ஒன்றாகிய வழிபாட்டு முறைகள், பிறிதொரு கட்டுரையில் விரிவான ஆய்விற்குட்படுகின்றது.
மேற்கூறிய வகையான கட்டுரைகளுள் மட்டக்களப்பின் வீர சைவம் பற்றிய கட்டுரையும் முக்கியமானது. மட்டக்களப்பில் இச்சமயத்தின் தோற்றம், பரம்பல் பற்றி விரிவாக ஆராய்கின்ற ஆசிரியர் இலங்கையின் வீர சமய வரலாற்றுப்பின்னணியில் அவை பற்றி விளக்கிச் செல்வது பொருத்தமானது.
பிரதேச வரலாறு சார்ந்த கட்டுரைகளாக மூன்று உள்ளன. தாந்தாமலை, மண்முனை தென்மேற்குப் பிரதேசம், அம்பிளாந்துரைப் பிரதேசம் ஆகியன இவ்விதத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிரதேச விளையாட்டுக்கள் தொடர்பானவையாக இரு கட்டுரைகள் காணப்படுகின்றன. இவற்றுள் ஒன்றான |மட்டக்களப்பின் பாரம்பரிய விளையாட்டுக்கள்| பற்றிய கட்டுரை அப்பாரம்பரிய விளையாட்டுக்களை புதிய முறைகளில் வகைப்படுத்தி ஆராய்கின்ற புதிய முயற்சியாகின்றது. மற்றொன்றான கொம்பு விளையாட்டு, தெய்வ வழிபாட்டு என்ற விதத்தில் அணுகப்படுகின்றது. இதுபற்றி ஏலவே எழுதப்பட்டுள்ள வி.சீ.கந்தையா முதலானோரின் கட்டுரைகளை விட, புதிய சில தகவல்களைக் கொண்டதாகவும், படங்கள் பலவற்றைக் கொண்டதாகவும் இக்கட்டுரை அமைந்திருப்பது. பாராட்டப்பட வேண்டியதொன்றாகிறது.
மட்டக்களப்பின் ஆளுமைகள் சார்ந்ததாக அமைகின்ற இரு கட்டுரைகள் கூட மட்டக்களப்பு சமயப்பெரியார்கள் பற்றியனவே. இவ்விதத்தில், அருணாசல தேசிகர், வித்துவான் சரவண முத்தன் ஆகியோர் பணிகள் மட்டக்களப்பின் சுதேச இயக்கப்பின்புலத்தில் கவனத்திற்குட்படுத்தப்படுகின்றன. இவர்களுள் ஒருவரான அருணாசல தேசிகர் பற்றிய கட்டுரை விரிவான முதன் முயற்சி என்பதில் தவறில்லை.
தவிர, இந் நூலில் இடம்பெற்றுள் இரு கட்டுரைகள் - நுண்கலைகள், நாட்டுக் கூத்துக்கள் தொடர்பானவை - அறிமுக நிலைப்பட்டன. ஆயினும், நூலிற்கு முழுமை சேர்ப்பன என்ற விதத்தில் முக்கியமானவையே.
சுருங்கக் கூறின், மட்டக்களப்பு பிரதேச பண்பாடு, சமயம், வரலாறு, சமூகம், மானிடவியல் முதலான சார்ந்த முக்கிய கூறுகள் சிலவற்றை தமிழில் முதன் முதலாக ஆய்வுக்குட்படுத்தியவனவாகவும் சிலவற்றை முதன் முதலாக விரிவாக நோக்குவனவாகவும் மகேஸ்வரலிங்கத்தின் ஆய்வு முயற்சிகளுள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதொன்றென்பதில் ஐயமில்லை.
இந்நூற் தொகுப்பில் இடம்பெறத் தவறிய வேறு சில கட்டுரைகளோடு மட்டக்களப்பு வீர சைவம் பற்றிய விரிவான ஆய்வொன்றிற்கான முயற்சிகளிலும் மகேஸ்வர லிங்கம் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார். அவையாவும் நூலுருப் பெறுகின்ற போதுதான் அன்னாரின் ஆய்வு சார் ஆளுமை மென்மேலும் துலக்கமுறும் என்பதையும் இவ்வேளை வற்புறுத்துவது அவசியமாகிறது.
இறுதியாக, பொருத்தம் கருதி மகேஸ்வர லிங்கம் பற்றிய பிறிதொரு ஆய்வாளரின் குறிப்புடன் இவ்வறிமுகக ;கட்டுரையை முழுமை செய்வது பொருத்தமென்று கருதுகின்றேன். அது பின்வருமாறு:
“ மகேஸ்வரலிங்கம் அவர்கள் தொழில் முறை ஆய்வாளர் அல்ல. ஆயினும், அவரது ஆய்வுகள் பெரும்பாலும் ஆய்வு நெறிமுறைகளுக்கு அப்பால் விலகிச் செல்லவில்லை. நெறிமுறை சார்ந்த மானிடவியல் ஆய்வாளராகவே அவரைத் துக்கம் செய்கின்றன. தற்போது கொலறாடோ பல்கலைக்கழகத்தின் (University of Colorado at Boulder)) மானிடவியல் துறையின் தலைவராக விளங்கும் பேராசிரியர் டெனிஸ் அவர்கள் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக விளங்கிய காலத்தில் (1970 களில்) மட்டக்களப்பைக் களமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட வேளை அவருக்கு ஆய்வுத் துணைவராக விளங்கிய அமரர் மகேஸ்வரலிங்கம் அவர்கள் தொடர்ந்தும் அவரோடு புலமைத் தொடர்புகள் வைத்துக் கொண்டவர். அத்தொடர்பும் மகேஸ்வரலிங்கத்துக்கே இயல்பான ஆற்றலும் அவரை ஒரு சிறந்த மானிடவியலாய்வாளராகத் துலங்கச் செய்தன எனலாம்.”

No comments:

Post a Comment